சமூக போராளி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா மணிப்பூர் மாநில மக்களின் உரிமைக்காக 16 வருடம் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். மணிப்பூரின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மோசமான தோல்வியைத் தழுவினார்.
இவரின் திருமணம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. பிரிட்டன் நாட்டை சேர்ந்தவரான தேஸ்மந்த் கொட்டின்கோ என்பவர் இரோம் ஷர்மிளாவை திருமணம் செய்து கொண்டார். 46 வயதான இவர் திருமணத்திற்குப் பின் கொடைக்கானலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், திருமணமாகி 2 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்னையர் தினமான ஞாயிற்றுகிழமை இரோம் சர்மிளாவுக்கு பெங்களூரில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. அந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு நிக்ஸ் சகி மற்றும் ஆட்டம் தாரா என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இரோம் ஷர்மிளாவுக்கு குழந்தை பிறந்த தகவலை சமூக ஆர்வலர் திவ்யா பாரதி தனது முகநூலில் தெரிவித்ததுடன் தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஷர்மிளாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கூறுகையில், “அவர் முதன்முதலில் என்னிடம் வரும்போது அவரின் வயது, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் காரணமாக அவருக்கு உதவ எனக்குப் பயமாக இருந்தது. ஆனால் அவர் உண்மையிலேயே ஒரு இரும்பு பெண்மணி. அதனால் எந்த விளைவும் ஏற்படவில்லை. அவர்கள் மிகவும் அமைதியான ஜோடி. சில சமயங்களில், எந்தவொரு வம்புமின்றி அவர்கள் எனக்காக ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை காத்திருப்பார்கள். உங்கள் எல்லாருக்கும் தெரியும் அவர் எவ்வளவு துணிச்சலானவர் என்று. ஆனால் அவரின் மென்மையான பக்கத்தை நான் பிரசவத்தின்போது பார்த்தேன். தாயும் சேயும் நலமாக இருப்பதையறிந்து 48 மணிநேரத்திற்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து இரோம் ஷர்மிளா கூறுகையில், “ இது எனக்கு புது வாழ்க்கை. எனக்கு ஒரு புதிய ஆரம்பம். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கும் என் கணவருக்கும் எந்த விருப்பமும் இல்லை. நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை மட்டுமே விரும்பினோம். அன்னையர் தினத்தன்று இரட்டை குழந்தைகள் பிறந்தது இரட்டை சந்தோசத்தை கொடுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.