இவ்வளவு பழமை வாய்ந்த காரை யாரும் ஓட்டமாட்டார்கள் என்று மிக் ரக விமானங்கள் குறித்து இந்திய விமானப்படை தளபதி பிஎஸ்.தனோவா தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையில் மிக்-21 ரக விமானங்கள் 1973ஆம் ஆண்டு முதல் சேவையில் உள்ளன. இவை விமானப்படை உபயோகத்திற்கு வந்து கிட்டத்தட்ட 44ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த மிக்-21 ரக விமானம் குறித்து இந்திய விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, “மிக்-21 ரக விமானத்தை நாம் 44 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இவ்வளவு ஆண்டுகாலமாக பழைய காரை கூட யாரும் பயன்படுத்த மாட்டார்கள். இந்த ரக விமானம் இந்தாண்டுடன் விமானப்படையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும்.
இந்த விமானத்தின் பாகங்களில் 95 சதவிகிதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் இத்தனை ஆண்டு காலம் இவ்விமானம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த விமானத்தை தயாரித்த ரஷ்ய நாடே தற்போது இதனை பயன்படுத்துவதில்லை. எனினும் இந்தியாவில் இதற்கான பாகங்கள் இருப்பதால் நாம் பயன்படுத்தி வருகிறோம். 2006ஆம் ஆண்டு 116 மிக்-21 ரக விமானங்கள் மிக்-21 பைசன்(Bison) விமானமாக தரம் உயர்த்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளில் மிக்-21 ரக விமானங்கள் நிறைய விபத்துகளை சந்தித்துள்ளது. அதாவது கடந்த 40 ஆண்டுகளில் மொத்தமுள்ள 872 விமானங்களில் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் விபத்துக்குள் ஆனதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.