‘கே.ஜி.எஃப்.’ படத்தைப் பார்த்து, அதுபோல் புகழ்பெற வேண்டும் என்பதற்காக, மத்தியப்பிரதேசத்தில் இரவுநேரக் காவலாளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி, 5 பேரை கொலை செய்த சீரியல் கில்லரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் நகரில் தொடர்ந்து 3 நாட்களாக இரவு நேரக் காவலாளிகள், பாறாங்கல்லால் தலையில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சீரியல் கில்லர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில், சாகர் நகரில் இருந்து 169 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போபால் நகரில், நேற்றிரவு இளைஞரான இரவு நேரக் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதுடன், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கொலையுண்ட இளைஞர் அருகே வந்த ஒருவர், அவரின் தலையில் பாறாங்கல்லைக் கொண்டு தாக்கி, கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்ற நிலையில், இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ கொலைசெய்யப்பட்ட காவலாளியின் திருடப்பட்ட செல்ஃபோனை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது அந்த செல்ஃபோன் இருந்த இடத்தின் சிக்னலை வைத்து 19 வயதான ஷிவ் பிரசாத் என்பரை இன்று காலை பேருந்து நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னட திரைப்படமான ‘கே.ஜி.எஃப்.2’ படத்தை பார்த்து ஈர்ப்புக் கொண்டு, ராக்கி பாய் மாதிரி கேங்ஸ்டராக புகழ் பெற வேண்டும் என்பதற்காக, இரவுநேரக் காவலாளிகளை குறிவைத்து ஷிவ் பிரசாத் கொலை செய்துள்ளதாக கோவல் அதிகாரியான தருண் நாயக் தெரிவித்துள்ளார். கடந்த 5 நாட்களில் 4 காவலாளிகளையும் ஷிவ் பிரசாத் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். அடுத்ததாக இரவுநேர போலீசாரை கொலை செய்யவும் ஷிவ் பிரசாத் திட்டமிட்டு இருந்ததாக தருண் நாயக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி, சாகர் நகரில் ஒரு தொழிற்சாலையின் காவலாளியாக பணிபுரிந்த கல்யாண் லோதியின் தலையை சுத்தியலால் அடித்து ஷிவ் பிரசாத் கொலைசெய்துள்ளார். அதற்கு அடுத்த நாள் இரவே, கலை மற்றும் வணிகக் கல்லூரியின் காவலாளியான ஷாம்பு நாராயண் துபே என்ற 60 வயது முதியவர் கல்லால் அடித்துக் ஷிவ் பிரசாத்தால் கொல்லப்பட்டார். அதற்கு மறுநாள் வீடு ஒன்றில் காவலாளி பணிசெய்துவந்த மங்கள் அஹிர்வார் என்பவர் ஷிவ் பிரசாத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடைசியாக மார்பிள் கடையில் காவலாளியாக இருந்த சோனு வர்மா என்ற 23 வயது இளைஞரை, நேற்றிரவு ஷிவ் பிரசாத் கொலை செய்தக் சிசிடிவி காட்சிகள் பார்ப்பவர்களை சில்லிட வைத்துள்ளது. ஷிவ் பிரசாத்தின் ஒரே நோக்கம் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதால், தூங்கும் காவலர்களை மட்டுமே குறிவைத்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த மே மாதம் மேம்பாலம் அருகே இரவுநேரக் காவலாளி ஒருவர் இதே பாணியில் கொலைசெய்யப்பட்டு அவர் மீது காலணிகளை ஷிவ் பிரசாத் வைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், "இது ஒரு கண்மூடித்தனமான கொலை. இரண்டாவது அல்லது மூன்றாவதாக கொலைசெய்யப்பட்ட நபரின் மொபைல் ஃபோனை எடுத்துச் சென்றதால் போலீசார், அதனை கண்காணித்து வந்தனர். தொலைபேசியின் இருப்பிடத்தின் அடிப்படையில் கொலையாளி போபாலில் பிடிபட்டார்" என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆயுதங்கள் எதுவும் எடுத்து வராத ஷிவ் பிரசாத் காவலாளிகளின் அருகில் கிடக்கும் பொருட்களை வைத்தே கொலை செய்து வந்ததும் கண்டறிப்பட்டுள்ளது.
இந்த தொடர் கொலைகள் நகரில் பயங்கரத்தை தூண்டியுள்ளதால், ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தைப் பார்த்து, கடந்த ஜனவரியில் தலைநகர் டெல்லியில் பிரபலமடைவதற்காக 3 சிறுவர்கள், இளைஞர் ஒருவரை கொலை செய்த நிலையில், தற்போது ‘கே.ஜி.எஃப்’ பார்த்து இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.