மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 27 (நாளை) ஆம் தேதி நடைபெறும் நிலையில், 17 வது மக்களவையில் சபாநாயகர் பதவி வகித்த ஓம் பிர்லாவுக்கு மீண்டும் அந்தப் பதவியை அளிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. இதனால், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைவதற்கு முன்பு வரை எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் கே சி வேணுகோபால் மற்றும் திமுகவின் டி ஆர் பாலு ஆகியோர் இந்தியா கூட்டணி சார்பாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். ஆனால் இறுதி வரை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி கூட்டணிக்கு அளிப்பதில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.
துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு அளித்தால், பாஜகவின் சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இதுகுறித்து ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தொலைபேசியில் மீண்டும் அழைப்பதாக கூறிய நிலையில் அப்படி அழைப்பேதும் வரவில்லை எனவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். பின் சிறிது நேரத்தில் I.N.D.I.A. கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ், மக்களவை சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஓம் பிர்லாவுக்கு 293 வாக்குகள் கிடைக்கும் என்பதால் வெற்றி உறுதியானதாக பாஜக கணக்கிட்டுள்ள நிலையில், I.N.D.I.A. கூட்டணியின் வேட்பாளரான சுரேஷுக்கு 233 வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்கால சபாநாயகர் பதவிக்கு பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த சூழலில் தொடங்கிய மோதல் தற்போது மேலும் வலுப்பட்டுள்ளது. கொடிக்குன்னில் சுரேஷ் மக்களவையிலேயே மூத்த உறுப்பினர் எனவும் அவருக்கே இடைக்கால சபாநாயகர் பதவி அளிக்கப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியது. .