“காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்” - போர்கொடி உயர்த்திய முன்னாள் அமைச்சர்

“காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்” - போர்கொடி உயர்த்திய முன்னாள் அமைச்சர்
“காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்” - போர்கொடி உயர்த்திய முன்னாள் அமைச்சர்
Published on

இரண்டு வருடத்திற்கு காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார் என முன்னாள் அமைச்சர் அஸ்லம் ஷெர் கான் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. கடந்த முறை ராகுல்காந்தி வெற்றி பெற்ற உத்திரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இந்தமுறை தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரித்தி இரானியிடம் தோல்வி அடைந்தார். ஆனாலும் வயநாடு தொகுதியிலும் ராகுல்காந்தி போட்டியிட்டதால் அது அவருக்கு கைகொடுத்தது. 

தமிழ்நாடு, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைத் தவிர பெரும்பாலான காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. இது காங்கிரஸார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து, கடந்த மே 25 அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாக தெரிவித்தார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அதை ஏற்கவில்லை. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் அஸ்லம் ஷெர் கான், ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியதாக தெரிவித்துள்ளார். 

அதில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாகவும், அந்தப் பொறுப்புக்கு காந்தி குடும்பத்தை சாராத ஒருவரை நியமிக்க வேண்டும் எனக் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் தேவை. காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை அளிக்க யாரவது ஒருவர் முன்னோக்கி வரவேண்டும் என நான் நினைத்தேன். ராகுல் காந்தி கட்சித் தலைவராக இருக்க விரும்பினால், அதை தொடரட்டும். ஆனால் வேறு யாராவது அதற்கு பொருத்தமானவர் என்று நினைத்தால், அந்த வாய்ப்பை நான் ஏற்கிறேன். நேரு குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் யாராக்காவது காங்கிரஸ் தலைவர் பொறுப்பை கொடுக்க விரும்பினால், அதை எனக்குக் கொடுங்கள். இரண்டு வருடங்களுக்கு எனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுங்கள். மீண்டும் ஒருமுறை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும்” என எழுதியதாக தெரிவித்தார். 

மேலும் காங்கிரசுக்கும் மக்களுக்கும் தொடர்பு குறைவாக இருந்ததே மீண்டும் மோடி ஆட்சி அமைக்க காரணம் என அஸ்லம் ஷெர் கான் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com