வடஇந்தியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் தொண்டை மற்றும் உடல் உறுப்புகளில் இருந்த குண்டூசி குவியல்களை நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் மருத்துவர்கள்
அகற்றினர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பத்ரிலால் மீனா. இவர் கடந்த சில ஆண்டுகளாக மூட்டு வலி மற்றும் சக்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில்,
திடீரென அவருக்கு தொண்டை பகுதியில் வலி அதிகரித்து பேசமுடியாமல் போனதால் மருத்துவமனையில் அவரை அனுமதித்த மருத்துவர்கள் அவரின் தொண்டைப்
பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அதில் அவரின் தொண்டை பகுதி முழுவதும் குண்டூசி குவியல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக்கண்டு
அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவரின் உடல் முழுவதும் எக்ஸ்ரே எடுத்தனர். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அவர் உடலின் பல பகுதிகளில் குண்டூசிகள் இருப்பதை
கண்டு செய்வதறியாமல் மருத்துவர்கள் திகைத்தனர். இதனை சீர்செய்ய முடியாமல் 6க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கைவிரித்த நிலையில், கடைசியாக ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் அவர் உடலில் இருந்த 90 குண்டூசிகளை அகற்றினர். 150 குண்டூசிகள் அவர் உடல் முழுவதும் உள்ள நிலையில், தொண்டை பகுதியிலிருந்த 90 குண்டூசிகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதால் நீண்ட நாளாக பேசமுடியாமல் தவித்து வந்த பத்ரிலால் மீனா தற்போது பேச ஆரம்பித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குண்டூசிகள் அவரின் உடலுக்குள் எப்படி சென்றது என்று தெரியவில்லை என பத்ரிலால் கூறிய நிலையில், அவரின் மனநிலை பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். மனஉளைச்சல் மற்றும் பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது வழக்கம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.