டெல்லியில் குடியரசுத் தினத்தன்று ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 122 பேரை கைது செய்துள்ளது டெல்லி போலீஸ். இவர்களில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான 80 வயது முதியவரும் ஒருவர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியரசுத் தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின்போது, எதிர்பாராத விதமாக சில இடங்களில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 122 பேரை கைது செய்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இவர்களில் 80 வயது முதியவரான குர்முக் சிங்கும் ஒருவர். பஞ்சாப் மாநிலத்தில் ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயியான குர்முக் சிங், ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் ஆவார்.
டெல்லி சிங்கு எல்லையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் முகர்ஜி நகர் போலீசார் குர்முக் சிங்கையும் கைது செய்திருக்கிறது.