இஸ்லாமிய மதகுரு மற்றும் கடையில் பணிபுரிந்த ஒருவர் சேர்ந்து 14 வயது சிறுமியை, மசூதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 2015ஆம் ஆண்டு செய்தியை, வலதுசாரி அமைப்பினர் தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 வயதுச் சிறுமி கடந்த ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போனார். ஒரு வாரத்திற்குப் பிறகு ராஸன்னா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து வழிபாட்டுத்தலம் ஒன்றில், மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது கண்டுப் பிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக டெல்லி தடயவியல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 18 வயது நிரம்பாத அந்தச் சிறுவன், சிறுமியை அடித்துக்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு இந்திய அளவில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த வழக்கில் இன்று விசாரணை நடத்தப்பட்டு, வழக்கு வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஒருவாரமாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக உள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நீதி வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். இதனால் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்திலும், ஆசிஃபாவின் புகைப்படங்கள் தான் வலம் வருகின்றன. இதுதொடர்பான பதிவுகள் அனைத்திலும் வலதுசாரிகளுக்கு எதிராக, இடதுசாரி அமைப்பினர் மற்றும் பலர் கடுமையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்கள் தரப்பிலிருந்து வலதுசாரியினர், 2015ஆம் ஆண்டு செய்தி ஒன்றை தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 2015ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் என்ற பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிக்கொண்டிருந்த 14 வயது சிறுமியை, கடையில் பணிபுரியும் ஒருவரும், இஸ்லாமிய மதகுரு ஒருவரும் சேர்ந்து மசூதிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அப்போது ஊடங்களில் வெளியான செய்திகளை, தற்போது வலதுசாரியினர் குறிப்பிட்டு, நியாயம் வேண்டும் என பரப்பி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தகவலை இயக்குநர் அசோக் பண்டிட் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அது நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது. அசோக் பண்டிட்டை பிரதமர் மோடி ட்விட்டரில் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது. அவர் மட்டுமின்றி வலதுசாரி ஆதரவாளர்கள் பெரும்பாலானோரும் இதைத் தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.