ஒடிசா மாநிலத்தில் மாதத்தவணை என்று சொல்லப்படும் இஎம்ஐயில் வாங்கிய மொபைல் போனை கணவன் பரிசளித்ததால், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள கலிமேலா தாலுகாவின் MPV 14 கிராமத்தில் வசித்து வந்தவர் கன்ஹேய். இவர் கடந்த வருடம் ஜோதி மண்டல் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, கன்ஹேய் தனது மனைவி ஜோதிக்கு பரிசளிக்க ஒரு ஸ்மார்ட்போனை வாங்கினார். போனின் விலை அதிகமாக இருந்ததாலும், அதை ஒரேயடியாக செலுத்த முடியாததாலும், கன்ஹேய் மாதத்தவணை என்று சொல்லப்படும் இஎம்ஐயில் அந்த மொபைல் போனை வாங்கியுள்ளார்.
தனது மனைவிக்கு இந்த மாதத்தவணை குறித்து கன்ஹேய் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இறுதித் தவணைத் தொகையை கன்ஹேய் செலுத்தியவுடன், நிதி நிறுவன அதிகாரிகள் தம்பதியினரின் கையெழுத்துக்காக அவர்களது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது தான் ஜோதிக்கு தான் பயன்படுத்திய மொபைல்போன் இஎம்ஐயில் வாங்கிய விவரம் தெரியவந்துள்ளது.
இஎம்ஐயில் மொபைல் வாங்கி பரிசளித்த்தை கன்ஹேய் தன்னிடம் கூறாததால் கோபமடைந்த ஜோதி, கணவர் கன்ஹேயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் மோதல் முற்றிய நிலையில், கணவன் முன்பு ஜோதி திடீரென விஷம் குடித்துள்ளார். இதைப் பார்த்த கன்ஹேய் அதிர்ச்சியில் தரையில் சரிந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஜோதி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கன்ஹேய் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், போலீசார் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.