கணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..!

கணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..!
கணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..!
Published on

உயிரிழந்த கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல இலவச அமரர் ஊர்தி சேவையை மருத்துவமனை நிர்வாகம் வழங்க மறுப்பு தெரிவித்ததால் மருத்துவமனை முன்பு பணத்திற்காக அவரது மனைவி பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின தம்பதியினர் டாக்ராய் மற்றும் அவரது மனைவியான முண்டா. கடந்த சில மாதங்களுக்கு முன் தினசரி பிழைப்புக்காக தங்களது சொந்த கிராமத்தில் குழந்தைகளை விட்டு விட்டு பட்டமண்டாய் நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். அங்கு தினசரி கூலி வேலை செய்து வந்த தம்பதியினர் அதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வயிற்றை நிரப்பி வந்தனர். இதனிடைய டாக்ராய்க்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே அவர் பட்டமண்டாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி டாக்ராய் உயிரிழக்க அவரது மனையியான முண்டாய் என்ன செய்வதென்று குழம்பினார்.

கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்று அடக்க செய்ய நினைத்த முண்டா அதற்கு முயற்சி செய்தார். அதற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் இலவச அமரர் ஊர்தி சேவை பெற அணுகினார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இலவச அமரர் ஊர்தி சேவை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. ரூபாய் 300 கொடுத்தால் தான் அமரர் ஊர்தி சேவை வழங்க முடியும் என கூறிவிட்டது.

இதனையடுத்து 300 ரூபாய் பணத்திற்காக மருத்துவமனை முன்பு முண்டா பிச்சை எடுத்தார். முண்டா விரித்து வைத்த துண்டில், அங்கு வந்தவர்கள் தங்களால் முயன்ற பணத்தை இட்டுச் சென்றனர். இதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை கொண்டு அமரர் ஊர்தி சேவையை பெற்ற முண்டா, தனது கணவரின் உடலை அடக்கம் செய்தார்.

ஒடிசாவில் மகாபிரயான் திட்டத்தின் கீழ் இலவச அமரர் ஊர்தி சேவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் முண்டாவிற்கு இலவச அமரர் ஊர்தி சேவை மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை அமைந்துள்ள கேந்திரப்பா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி கூறும்போது, இந்த மாவட்டத்தில் உள்ள அமரர் ஊர்தி சேவையை மற்ற மாவட்டத்திற்கு அனுமதிப்பது இல்லை. உள்மாவட்டத்திற்கு மட்டும்தான் இலவச அமரர் ஊர்தி சேவை பயன்படுத்தப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com