ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி அன்று மாலை 7 மணியளவில், தவறான பாதையில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்து அருகில் இருந்த தண்டவாளங்களில் விழுந்தன. அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த பெங்களூரு - ஹவுரா விரைவு ரயிலும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் மோதி தடம் புரண்டது. இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். சுமார் 800 பேர் காயம் அடைந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விபத்து நடைபெற்ற இடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று, அவையும் முடிவடைந்து இன்று முதல் அப்பகுதியில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஒடிசா ரயில் விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் ஒரு கும்பல் மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதன்படி The Random Indian என்ற ட்விட்டர் கணக்கில், 'இந்த ரயில் விபத்து வெள்ளிக்கிழமை நடந்து உள்ளது; அருகிலேயே பாருங்கள் மசூதி உள்ளது' என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அதவாது, இது விபத்து அல்ல; ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நாசவேலை என்பதுபோல் சித்தரித்து மதக் கலவரத்தை உண்டாக்கும் விதமாக ட்வீட் செய்யப்பட்டிருந்தது.
இவரைப்போலவே பலரும் பதிவிட்டுள்ளனர். இந்த நிலையில் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயும் பிரபல இணையதள செய்தி நிறுவனமான Alt நியூஸ், பஹானாகாவில் விபத்து நடந்த இடத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர் தமல் சாஹாவை தொடர்பு கொண்டு விபரம் கேட்டது. அவர் கூறிய தகவலின்படி, விபத்து நடந்த இடத்தில் அருகில் இருந்தது மசூதி கிடையாது. அது இஸ்கான் கோவில்.
வேண்டுமென்றே கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று அந்த புகைப்படத்தை வெட்டி இப்படி பரப்பி வருகின்றனர். அது ஒரு பஹனாகா இஸ்கான் கோவில் என்று ஆதாரங்களுடன் நிரூபணம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரயில் விபத்து குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஒடிசா காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஒடிசா போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்துக்கு சிலர் சமூக ஊடகங்கள் மூலம் மதவாத வண்ணம் கொடுப்பது துரதிஷ்டவசமானது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தவறான நோக்கமுள்ள பதிவுகளை பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வதந்திகளை பரப்பி மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒடிசா காவல்துறை எச்சரித்துள்ளது.