ஒடிசா மாநிலத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட தற்போது குறைந்த அளவு வாக்குகளே பதிவாகியுள்ளன.
17ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைபெற்றது. இதில் ஒடிசாவிலும் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்கக் கூடாது என மாவோயிஸ்ட்கள் அங்கு மிரட்டல் விடுத்திருந்தனர். இதன் எதிரொலியாக நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த 6 வாக்குச் சாவடிகளில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.
மால்கான்கிரி மாவட்டம், சித்ரகொண்டாவில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை. இதேபோல, காலகாண்டி மாவட்டத்தில் உள்ள பேஜ்பாதர் கிராமத்தில், சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்தனர். வாக்குப்பதிவு தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள ஒடிசா தலைமை தேர்தல் அதிகாரி, கடந்த 2014ஆம் நடைபெற்ற தேர்தலைவிட, இந்த முறை முதற்கட்ட வாக்குப்பதிவு 8% குறைந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த முறை 74% வாக்குப்பதிவாகியிருந்த நிலையில், இந்தமுறை 66% மட்டுமே பதிவாகியுள்ளது. மாவோயிஸ்ட்டுகளின் மிரட்டல் மட்டுமின்றி, குடிநீர் பிரச்னை, வேலையின்மை, சட்ட ஒழுங்கு பிரச்னைகளும் வாக்கு சதவிகிதம் குறைந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.