ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர், தன் மனைவியை மருத்துவமனைக்கு 90 கி.மீ. தூரம் தட்டு ரிக்சாவில் அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூரி மாவட்டத்தில் உள்ள சுகந்தி மருத்துவமனையில் முதலில் அவரது மனைவி கபீர் பாய் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருடைய நிலைமை மோசமாகவே கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
பின்னர் கட்டாக் செல்ல அவரால் ஆட்டோவை வாடகைக்கு எடுக்கமுடியவில்லை. பின்னர் சைக்கிள் தட்டு ரிக்சாவை எடுத்துச் சென்றிருக்கிறார். கட்டாக்கில் அவர்களைக் கண்டுகொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், அவரது மனைவியை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்தார்கள்.
"ஒரு ஆட்டோ ரிக்சாவை வாடைகைக்கு எடுக்க முயற்சி செய்தேன். கட்டாக் வரை செல்ல ரூ. 1200 கேட்டார்கள். எனக்கு வேறு வழியே தெரியவில்லை. எனவே ஒரு சைக்கிள் தட்டு ரிக்சா மூலம் மனைவியை அழைத்துச் சென்றேன். கடந்த ஓர் ஆண்டாக சுகந்தி மருத்துவமனையால் மிகுந்த துயரத்துக்கு ஆளாகிவருகிறேன். இந்த முறை என்னுடைய பயணம் ரொம்பவும் வலி மிகுந்ததாகவும், களைப்பாகவும் இருந்தது. என் மனைவிக்கு சிறந்த மருத்துவம் கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார் அந்தப் பெரியவர்.
ஏழைத் தம்பதிகளின் நிலைமை அறிந்து கட்டாக் எஸ்சிபி மருத்துவமனை நிர்வாகம் இலவசமாக மருத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது.