மொழி என்பது சமூக கட்டமைப்பில் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது மொழியை முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய நடவடிக்கையில் ஒன்றுதான் சொந்த மொழியில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என்பது. பெயர் பலகைகளைப் பொறுத்தவரை மாநிலத்தின் மொழியை பெரிய எழுத்தி எழுதிவிட்டு அதன் பிறகு அதனைவிட குறைவான அளவில் இணைப்பு மொழியான ஆங்கிலமோ அல்லது பிற மொழியோ இருக்கலாம் என்பது விதி. அதாவது மாநிலத்தின் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் எல்லா மாநில அரசுகளும் உறுதியாகவே இருக்கின்றன.
ஒடிசா அரசு முன்னெடுத்த நடவடிக்கை!
அந்த வகையில் தான் ஒடிசா அரசு முக்கியமான ஒரு முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது. அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஒடியா மொழியில் பெயர் பலகைகளை பயன்படுத்துகிறார்களா என்பதை சரிபார்த்து, ஒருவேளை சட்டத்தை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு அனைத்து மாவட்ட தொழிலாளர் அலுவலர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு ஒடிசா அரசு உத்தரவிட்டிருக்கிறது.
7 நாட்களுக்கு பிறகும் சரிசெய்யவில்லை என்றால்..
ஒடியா மொழி இலக்கியம் மற்றும் கலாசாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெற்ற இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பெயர் பலகை தொடர்பான ஒடிசா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (திருத்தம்) சட்டம், 2018ஐ மீறும் வணிக நிறுவனங்களுக்கு முதலில் ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்றும் இந்த ஏழு நாட்களில் அவர்கள் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால், முதல் கட்டமாக ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகும் விதிமுறைகளின்படி பெயர்பலகைகள் திருத்தப்படவில்லை என்றால் கடை உரிமையாளர்களுக்கு ₹25000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஒடிசா அரசு தரப்பில் கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகளில் எந்த மொழியையும் பயன்படுத்தலாம், ஆனால், ஒடியாவில் உள்ள வாசகங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். ஒடியாவில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பெயர் பலகைகளை எழுதுவது தொடர்பாக சட்டத்தில் எந்த குறிப்பிட்ட விதியும் இல்லாததால், ஒடிசா அரசு சார்பில் 1956 ஆம் ஆண்டு ஒடிசா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தை 2018 இல் திருத்தி, 2019 இல் விதிகள் வெளியிடப்பட்டன.
பல மாநிலங்களில் இதுபோன்ற நடைமுறையே உள்ளது!
ஒடிசாவைத் தவிர, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்கள் வணிக நிறுவனங்களுக்கு உள்ளூர் மொழிகளில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசாங்கம் இந்த ஆண்டு பிப்ரவரியில் கடைகளில் குர்முகி எழுத்துக்களில் பெயர் பலகைகள் வைப்பதை கட்டாயமாக்கியது.
அதேபோல், கடந்த ஆண்டு, மகாராஷ்டிரா அரசு, கடை உரிமையாளர்கள் மராத்தி மொழியில் பெயர் பலகைகள் வைத்திருப்பதைக் கட்டாயமாக்கியது. எவ்வாறாயினும், சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் ஒன்றின் மனுவின் பேரில், நவம்பர் மாதம் இந்த விதிமுறையை தற்போதைய நிலையில் வைத்திருக்குமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல், கர்நாடகாவில் 2018 ஆம் ஆண்டு முதல் பெயர் பலகைகளில் உள்ளூர் மொழியை பயன்படுத்துவது தொடர்பான விதி அமலில் உள்ளது.