காதல் என்பது அழகானது; அபூர்வமானது; அதிசயமானது. உலகில் காதலைப் பற்றிச் சொல்லாத மனிதர்களும் இல்லை; காதலிக்காத உயிர்களும் இல்லை. அப்படிப்பட்ட புண்ணியமான காதலுக்கு, சில மக்களிடையே புரிதல் இல்லாததால் எதிர்ப்பு கிளம்புகிறது. அந்த எதிர்ப்பு, பிரியப்பட்ட பிஞ்சு இதயங்களைச் சேர்த்துவைக்க ஆர்வம் காட்டுவதில்லை. இறுதிவரை பிரித்துவைக்கவும் அல்லது அந்த உயிர்களையே இல்லாமல் ஆக்கவுமே ஆர்வம் காட்டுகின்றனர்.
இது, இன்றும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படி, பெற்றோரால் அல்லது உறவினர்களால் காவு வாங்கப்படும் காதலர்களின் உயிர், ஆணவக் கொலை’ என்ற பெயரில் இடம்பிடித்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தங்களது மகனோ அல்லது மகளோ காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களை இறுதிவரை தங்கள் வீட்டில் சேர்க்காமல் இருக்கிறார்கள். உண்மையில் மகனும், மகளும் இறந்துவிட்டதாகவே நினைக்கிறார்கள். இப்படி ஒரு சம்பவம்தான் ஒடிசாவில் அரங்கேறியிருக்கிறது.
ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம் மஹாங்காவின் உமர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிஸ்வஜித் மொஹபத்ரா. இவருடைய மகள் பாயல். இவர், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பருவப் பெண்ணான எல்லோருக்கும் காதல் வருவது இயற்கைதானே. அதே காதல்தான் பாயலுக்கும் வந்துள்ளது. அவர், தனது ஆசிரியரான பெஹெரா மீது காதல் கொண்டார். அவரும் பாயல் மீது காதல் கொண்டிருந்தார். இருவரின் காதலும் வீட்டுக்கு மெல்லமெல்ல தெரிய வந்தது. இதையடுத்து, பாயல் குடும்பத்தினர் காதலர் பெஹெரா மீது பத்ரேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட காதலர் பெஹெராவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
காதலருக்காக 6 மாதம் காத்திருந்த பாயல், பின்னர் பெஹெரா விடுதலையானவுடன், தன் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளூர் கோயில் ஒன்றில், அவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு பாயல் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பதறிப்போன பாயலின் பெற்றோர், ‘மகளைக் காணவில்லை’ என போலீஸில் புகார் அளித்தனர். அவர்கள் விசாரணையைத் தொடங்கிய சமயத்தில், காவல் துறைக்கு பாயல், வீடியோ ஒன்றை அனுப்பி, அதிர்ச்சியளித்தார். அந்த வீடியோவில், ’எனக்கு 18 வயதாகிறது. என் விருப்பப்படி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன். வீட்டில் உள்ளவர்கள் எனக்கு தொல்லை கொடுக்கின்றனர். என்னை யாரும் கடத்தவில்லை. என் விருப்பப்படியே திருமணம் செய்துள்ளேன்’ எனவும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அனுப்பிய மற்றொரு வீடியோவில், ‘எனக்கோ அல்லது என் கணவரின் குடும்பத்திற்கோ ஏதேனும் விபரீதம் நடந்தால், அதற்கு என் குடும்பத்தில் உள்ள பெற்றோர்களே காரணம்’ எனவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், தங்களது விருப்பத்திற்கு மாறாக, பாயல் திருமணம் செய்துகொண்டதை அறிந்த அவரது பெற்றோர், அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்திருப்பது ஒடிசாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாயலின் தந்தை பிஸ்வஜித் மொஹபத்ரா, ”எனது மகளை, 18 வயதுவரை மிக ஒழுக்கமாய் வளர்த்தேன். ஆனால், அவள் ஓடிப்போய், எங்கள் சம்மதம் இல்லாமல் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இதை எங்களால் ஏற்க முடியவில்லை. ஆதலால், மிக கனத்த இதயத்துடன், அவள் இறந்துவிட்டதாக நினைத்து, அவளது மரணத்திற்குப் பிந்தைய இறுதிச்சடங்குகளைச் செய்துள்ளோம். ஒரு மகள், குடும்பத்திற்கு பக்கபலமாக இல்லை என்றால், அவரை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். என் மகள் செய்த தவறை பிற குடும்பத்தைச் சேர்ந்த மகன்களோ அல்லது மகள்களோ செய்யக்கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தேன். இது பொதுமக்களுக்கான ஒரு செய்தி” எனத் தெரிவித்தார்.
அதேநேரத்தில் பாயலின் காதலை, அவரது மாமனார் குடும்பத்தினர் ஏற்றுள்ளனர். இதுகுறித்து பாயலின் மாமனார் காஷிநாத் பெஹெரா, “என் மருமகளுக்கு இப்போதுதான் 18 வயதுக்கு மேல் ஆகிறது. இந்த வயதில் அவருக்கு தன் வாழ்க்கைத் துணையைப் பற்றி முடிவெடுக்க முழு உரிமை உண்டு. என் மகன், பாயலை மனைவியாக ஏற்றுக்கொண்டுள்ளார். அவருடைய முடிவில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.