ஃபோனி புயலுக்கு முன்பாக மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று துரித நடவடிக்கையில் ஈடுபட்ட ஒடிசா காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஃபோனி புயல் ருத்ரதாண்டவம் ஆடி ஒடிசாவை புரட்டி போட்டுள்ளது. புயலின் கோரதாண்டவத்தால் ஒடிசாவே உருமாறிக்கிடக்கிறது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீட்புப்பணியில் துரிதம் காட்டி வருகின்றன. ஒடிசா அரசு, புயலை சரியாக கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் உயிர்ச் சேதத்தை பெருமளவு குறைத்துள்ளது. வானிலை மையங்களில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதியை கொண்டும், செயற்கைகோள் எடுத்து அனுப்பிய புகைப்பட மாதிரிகளை கொண்டும் புயலை முன்கூட்டியே கணித்தது மிகச் சரியாக அமைந்தது.
இதனால் உஷாரான ஒடிசா அரசு 12 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றது. சில தினங்களில் இவ்வளவு அதிகம் மக்கள் வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும். வானிலை மையத்தின் எச்சரிக்கை தகவல்களை அரசு நிர்வாகம் மிகச் சிறப்பாக மக்களுக்கு கொண்டு சேர்த்திருந்தது.
மிகக்குறுகிய காலத்தில் 12 லட்சம் மக்களை வேறு இடத்துக்கு மாற்றுவது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை. ஒடிசா அரசின் துரித நடவடிக்கையால் அது சாத்தியமானது. வெறும் முன்னெச்சரிக்கை வார்த்தைகள் மட்டும் கொடுக்காமல் ஒடிசா காவல்துறையினர் களத்தில் இறங்கினர்.
காவலர்களே மக்களை தங்கள் வாகனங்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதில் ஒரு பெண் காவலர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு செல்லும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
ஃபோனி புயலை சரியாக கையாண்டு உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுத்துள்ளதாக இந்தியாவை ஐநாவை சேர்ந்த பேரிடர் மீட்புக் குழு பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.