நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. இத்தேர்தலில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் தனித்துப் போட்டியிடுகிறது. இதற்காக கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ”நவீன் பட்நாயக் தனது வயது மற்றும் உடல்நலத்தை கருத்தில்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும்” என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், ”நவீன் பட்நாயக் காணொளி வாயிலாக பேசும்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்” எனவும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இதையும் படிக்க: புதிய இலக்கு! Gpay, PhonePe-க்கு போட்டியாக அதானி குழுமத்தின் அடுத்த டார்கெட்!
இதற்குப் பதிலளித்த நவீன் பட்நாயக், "பாஜக மக்களிடம் சொல்லும் பொய்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது. நீங்கள் இப்போது பார்க்கிறபடி, நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். பல மாதங்களாக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். பாஜகவினர் தங்கள் சொந்த நுண்ணறிவை முதலில் பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நவீன் பட்நாயக் மேடை ஒன்றில் பேசும்போது, அவரது கை நடுங்கிய படி இருக்கிறது. அப்போது, அவரது உதவியாளரும் பிஜேடி தலைவருமான வி.கே.பாண்டியன் நடுங்கும் கையைப் பிடித்து கேமராவில் இருந்து மறைக்க முயல்கிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை வைத்துத்தான் பாஜகவினர் அவருக்கு உண்மையிலேயே வயதாகிவிட்டதாகவும், அவர் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து பாஜகவினர் மீண்டும் அவரது உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தத் தாக்குதல் நவீன் பட்நாயக் மீது அல்ல, மாறாக பிஜேடி மேலிடத்தின் வாரிசாகக் கருதப்படும் வி.கே.பாண்டியன் மீது நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த கை நடுக்கத்திற்கும் நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”இது வெறும் கவனச்சிதறல் மட்டும்தான். பிரச்னை இல்லாததையும் பிரச்னைகளாக மாற்றுவது பாஜக. அதனால்தான் என் கைகளை தற்போது விவாதிக்கிறது. இது வேலைக்கு ஆகாது” என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த வீடியோவின் தொடக்கத்தில் நவீன் பட்நாயக் அதே கையால் (நடுங்கும் கை) மக்கள் முன் உயர்த்திக் காட்டி, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.