சத்தீஸ்கர் மாநிலத்தின் கர்சியா பகுதியைச் சேர்ந்த சுமார் 50 பயணிகள், ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தில் உள்ள பதர்செனி குடாவில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு படகில் திரும்பிக் கொண்டிருந்தனர். அச்சமயம் மகாநதி ஆற்றில் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த படகானது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மூன்று குழந்தைகள் உட்பட ஏழுபேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏழு பேரின் சடலமும் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பயணிகளை ஏற்றிக்கொண்ட படகானது, ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள ரெங்கலிம் சாரதா காட் பகுதியை அடையவிருந்தபோது படகு கவிழ்ந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று மாலையே உள்ளூர் மீனவர்கள் உதவியால் பயணிகளில் 35 பேர் மீட்கப்பட்டனர் என்றும் மேலும் ஏழு பயணிகளை காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர் என்றும் தெரிகிறது.
மேலும் காணாமல் போன பயணிகளை மீட்க நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது ஐந்து ஸ்கூபா டைவர்ஸ் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.