நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. என்றாலும், பாஜக தன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு குறித்து இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. கூட்டணிக் கட்சி அமைந்திருப்பதால் சபாநாயகர் பதவியிலும் அவைகள் பங்கு கேட்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை மக்களவை சபாநாயகர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முறையும் அதே நடைமுறையை பின்பற்ற பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், தெலுங்குதேசம் கட்சி சபாநாயகர் பதவியை கேட்டு வருகிறது. இதையடுத்து, நாடாளுமன்ற புதிய மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்காக வரும் 24-ஆம் தேதி சிறப்பு கூட்டத்தொடர் தொடங்குகிறது. 26-ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மக்களவை தற்காலிக சபாநாயகராக பர்த் ருஹரி மஹ்தப் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்து உத்தரவிட்டுள்ளார். ஒடிசா மாநில பாஜக எம்பியான இவர், புதிய எம்பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.