குரங்கு காட்டிற்குள் தூக்கிச்சென்ற 16 நாள் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ளது, தலபஸ்தா என்ற கிராமம். இங்கு குரங்குகள் தொல்லை அதிகம். அடிக்கடி ஊருக்குள் வந்து எதையாவது தூக்கிச் செல்லும் குரங்குகளை, கிராமத்தினர் விரட்டி அடிப்பது வழக்கம். இதற்கிடையே குரங்குகள் சிலரை கடித்துக் குதறிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் தலபஸ்தா கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா நாயக் என்பவரின் மனைவி தனது 16 நாட்கள் குழந்தையுடன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் எழுந்து முகம் கழுவச் சென்ற போது, குரங்கு ஒன்று குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடியது. இதைப் பார்த்த நாயக் மனைவி கூச்சல் போட்டார். ஆனால் குரங்கு பாய்ந்து காட்டுக்குள் சென்றுவிட்டது. இதுதொடர்பாக வன அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு, மூன்று தனிப்படையினர் குழந்தையை தேடி வந்தனர். இந்த சூழலில் அப்பகுதி அருகே உள்ள கிணறு ஒன்றின் அருகில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.