செய்தியாளர் - பால வெற்றிவேல்
ஒடிசா மாநிலம் ராயகடாவிற்கு செல்ல இருந்த பயணிகள் ரயில் மற்றும் பலசா ரயில் ஆகியவை ஆந்திர மாநிலம் கண்டகப்பள்ளி அருகே கடந்த வருடம் அக்டோபர் 29ஆம் தேதி மோதி விபத்துக்குள்ளானது. விசாகப்பட்டினத்திலிருந்து பலாசா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், சிக்னல் கோளாறு காரணமாக அலமண்டா - கண்டகப்பள்ளி இடையே நின்று கொண்டிருந்தது. அப்போது, அதே பாதையில் வந்த விசாகப்பட்டினம் - ராய்காடா பயணிகள் ரயில், பலாசா ரயில் மீது மோதியது. இதில் 3 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், 14 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் ராயக்கடா பயணிகள் ரயிலை இயக்கிய லோகோ பைலட்டும் மரணமடைந்திருந்தார். இந்த விபத்துக்கான காரணம் குறித்தான விசாரணை ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு குழுவின் சார்பாக மேற்கொள்ளப்பட்டது. அப்போதே தனிமனித தவறு தான் விபத்திற்கு காரணம் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனாலும் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் ராயக்கடா பயணிகள் ரயிலை இயக்கிய லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட் ஆகியோர் ரயிலை இயக்கிக் கொண்டே கிரிக்கெட் போட்டி பார்த்துக் கொண்டிருந்தது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆந்திர ரயில் விபத்திற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக லோகோ பைலட் மொபைல் வீடியோ பார்த்ததால் தான் விபத்து ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவிக்கும்போது, “சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ரயில்விபத்திற்கு பைலட் மற்றும் லோகோ பைலட் என இருவரும், அப்போது நடந்துகொண்டிருந்த கிரிக்கெட் போட்டியில் தங்களது கவனத்தை செலுத்தியதே காரணம். தற்போது நாங்கள் அத்தகைய கவனச்சிதறல்களை கண்டறியக்கூடிய கருவிகளை நிறுவி வருகிறோம். பைலட்கள் மற்றும் கோ பைலட்கள் ரயிலை இயக்குவதில் தங்களது முழுக் கவனத்தையும் செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.