தவறான படங்களை ட்விட்டரில் பதிவிட்டு தவறான செய்தியைப் பரப்பியதற்காக பாஜகவின் டெல்லி செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், கடந்த 4-ம் தேதி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா என்ற பகுதியில், மதக் கலவரம் வெடித்தது. ஃபேஸ்புக்கில், குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றி இழிவாகப் பதிவிட்டதையடுத்து, அங்கு இரு தரப்பினரிடையே கலவரம் உருவானது.
இதையடுத்து, 'சமூக வலைதளங்களில் தவறான மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம் குறித்து ட்வீட் செய்த நுபுர் ஷர்மா, மேற்கு வங்கக் கலவரத்தின் படத்துக்குப் பதிலாக, 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரப் படங்களை இணைத்து ட்வீட் செய்தார்.
இதனால், தவறான படங்களின் மூலம் தவறான செய்தியைப் பரப்புகிறார் என்று அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, "தவறான செய்திகளைப் பரப்பி, ஃபேஸ்புக்கை, ஃபேக்புக்காக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். தங்களது அரசியல் நலனுக்காக, இதுபோன்று பொய் பரப்புரை செய்வதை மேற்குவங்க மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.