நுபுர் ஷர்மா முதல் கன்னையா லால் வரை.. நிகழ்வுகளின் தொகுப்பு

நுபுர் ஷர்மா முதல் கன்னையா லால் வரை.. நிகழ்வுகளின் தொகுப்பு
நுபுர் ஷர்மா முதல் கன்னையா லால் வரை.. நிகழ்வுகளின் தொகுப்பு
Published on

நாடு தாண்டி அதிகமாக பேசப்பட்ட, இப்போது வரை பேசப்படும் ஒரு பெயர் நுபுர் சர்மா. காரணம் நபிகள் நாயகம் குறித்து இவங்க பேசியதுதான்.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அப்போது பெரிதாக கண்டுகொள்ளப்படாத நுபுர் சர்மாவின் பேச்சு, altnews எனப்படும் fake news-களை கண்டுபிடிக்கும் நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜூபையர் பகிர்ந்த பிறகுதான் வைரலானது. இஸ்லாமிய நாடுகள் வரையும் எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக பாஜகவின் டெல்லி நிர்வாகி நவீன்குமார் ஜிந்தால் தனது ட்விட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டது மேலும் சர்ச்சையாக வெடித்தது. இதன் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல் வெடித்தது, இந்த மோதலில் சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரம் இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவியது. கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கண்டன குரல்கள் எழுப்பப்பட்டன; `இந்தியப் பொருள்களைப் புறக்கணிப்போம்’ என்கிற ஹேஷ்டேக் அரபு நாடுகள் முழுவதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டது இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எதிர்ப்பு குரல்களும், கண்டனங்களும் அதிகளவில் எழுவே, நுபுர் சர்மாவையும், நவீன்குமார் ஜிந்தாலையும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியது பாஜக. மேலும் பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதைப் பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது என தனது அறிக்கையில் பாஜக குறிப்பிட்டிருந்தது. இதனை தொடர்ந்து நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை தொடர்பாக விளக்களமிக்க இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது கத்தார்.

சரியாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கத்தார் சென்ற நிலையில் இந்த சம்மன் வந்தது பெரிய சர்ச்சையானது. கத்தாரை தொடர்ந்து ஈரான் மற்றும் குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. இது மத்திய அரசுக்கு தலைவலியாக அமைந்தது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவத்துறை விளக்கம் அளித்தது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தது தனி நபர்கள்தான். இந்த கருத்துக்கள் எதுவும், எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்கள் கிடையாது. இந்தியா அனைத்து மதங்களையும் மதிக்கிறது. ஏற்கனவே அந்த கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்தது.


நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சு நாடு கடந்தும், இன்றுவரை முடிந்தபாடு இல்லை. எதோ வகையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், நுபுர் சர்மாவின் வீடியோ வைரலாக காரணமாக இருந்த முகமது ஜூபைர் 2018ஆம் ஆண்டு போஸ்ட் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஹனிமூன் என்றிருந்த ஹோட்டல் பெயரை... ஹனுமான் என்று மாற்றி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த பதிவு இந்து மத உணர்வுகளை அவமதிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாக கூறி டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த சம்பவத்தின் ராஜஸ்தானில் நடந்துள்ள சம்பவம் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர நகரைச் சேர்ந்தவர் கன்னையா லால். தன்மண்டி பகுதியில் தையல் கடை வைத்திருக்கும் இவர், முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இதற்காக கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் கண்னையா லால். இந்த சூழலில், அவரது கடைக்கு வந்த இரண்டு நபர்கள் கன்னையா லாலை கழுத்தறுத்து கொலை செய்து, இதனை வீடியோவாக எடுத்தும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பிரதமர் மோடிக்கும் அந்த நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கன்னையா லால் கொலையை கண்டித்து உதய்பூரில் பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது.உதய்ப்பூர் மட்டுமல்லாமல் ராஜஸ்தான் முழுவதுமே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல பகுதிகளில் போராட்டக்கார்ரகள் கடைகள், வீடுகள், வாகனங்களுக்கு தீ வைத்தனர்.இதனால் மாநிலத்தில் பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ராஜஸ்தான் முழுவதும் 144 தடை உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவத்தினரும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கன்னையா லாலை கொலை செய்த 2 பேரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான இந்துக்களால் இந்தியாவில் வாழ முடியாத சூழல் உருவாகி வருவதாக காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி கூறியுள்ளார்.

மேலும் "ஒரு மனிதனை கொடூரமாக கொலை செய்துவிட்டு ஜிகாதிகள் அந்த வீடியோவையும் வெளியிடுகின்றனர். கடவுளின் பெயரால்... என கோஷமிட்டப்படி அவர்கள் அந்த மனிதரை கொலை செய்கின்றனர். இந்த வீடியோக்களை பார்க்க எனக்கு தைரியம் இல்லை. இதை பார்த்து என் மூச்சே நின்றுவிட்டது என்று கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.

-ரபியா சம்பத்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com