கேரளாவில், சர்ச் ஒன்றில் கன்னியாஸ்திரி நடத்திய கர்நாடக இசை நிகழ்ச்சி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேரள மாநிலம் வைக்கம் அருகில் உள்ளது, கொடுவச்சூர் செயின்ட் மேரிஸ் தேவாலயம். இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை வழிபட வந்தவர்க ளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக தேவாலயங்களில் மேற்கத்திய இசையில்தான் பாடல்கள் பாடப்படும். இங்கு, முதன் முதலாக கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாடியவர் ரின்ஸி அல்போன்ஸ் என்ற கன்னியாஸ்திரி.
இவர் அங்குள்ள செயின்ட் லிட்டில் தெரசா பள்ளியின் இசை ஆசிரியையாக இருக்கிறார். இவர், கிறிஸ்தவ பக்தி பாடல்களுக்கு இசை அமைத்து பூர்வக் கல்யாணி ராகத்தில் பாடினார். இவரது கச்சேரியை இசை ரசிகர்கள் பெரிதும் ரசித்தனர். பின்னர் அவருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
தேவாலய வளாகத்தில் இதுபோன்ற கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்துவது இதுவே முதன்முறை என்பதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.