உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில், இந்தியாவில் பணியாற்றுவோரில் மகளிரின் சதவீதம் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் பணியாற்றுவோரில் மகளிரின் சதவீதம் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
டிலாய்ட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் கடந்த 2005-ம் ஆண்டில் பணிபுரிபவர்களில் 36.7 சதவீதம் பேர் பெண்களாக இருந்ததாகவும், 2018-ம் ஆண்டில் அது 26 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அமைப்புச்சாரா துறைகள் மற்றும் ஊதியமற்ற வேலைகளில் சுமார் 19.5 கோடி பெண்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான கல்வி கிடைக்காதது, தகவல் தொழில்நுட்ப இடைவெளி போன்றவை பெண்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வதற்கு தடையாக இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஒருவகையில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் பெண்களுக்கு தடைக் கற்களாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. எனினும் இந்த நிலையை மாற்ற இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.