நாடு முழுவதிலும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சரி பாதி அளவு மருத்துவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், மருத்துவ வசதியும், மருத்துவக் கல்வியும் ஒரே இடத்தில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1956-ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சுருக்கமான பெயர்தான் எய்ம்ஸ். இந்தியாவில் 9 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மேலும் நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைய உள்ளது.
இந்தியாவின் முதல் இதயமாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது, முதல் செயற்கைக் கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டது என பல சிறப்புகள் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு உள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்காக ஆண்டுதோறும் 1000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை மத்திய அரசு செலவழிக்கிறது. நாட்டின் உயர் பதவிகளில் உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள் கூட உடல்நலக் குறைவின் போது எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தான் அனுமதிக்கப்படுகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வாஜ்பாய் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நாடு முழுவதிலும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சரி பாதி அளவு மருத்துவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 670 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிவதாகவும் 372 இடங்கள் காலியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதேப்போல போபால், புவனேஸ்வர், பாட்னா உள்ளிட்ட பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மொத்தம் 2395 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 1031 பேர் மட்டுமே பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1364 பணியிடங்களை மத்திய அரசு காலியாக வைத்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த தகவலில் தெரியவந்துள்ளது. மேலும் துணை மருத்துவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரிவில் காலி பணியிடங்கள் அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.