2018-19ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கடந்த நிதியாண்டில் இருந்ததை விட 121 சதவிகிதம் இப்போது அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தனது 2018-19ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பணப்புழக்க நிலை குறித்து தெரிவித்துள்ளது. அதன்படி வங்கிகளில் பணப்புழக்கம் 2017-18ஆம் ஆண்டைவிட 6.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் 500ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் பணப்புழக்கம் அதிகரித்ததே ஆகும்.
அத்துடன் இந்த அறிக்கையில் நாட்டிலுள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளும் தரப்பட்டுள்ளது. அதன்படி 2018-19ஆம் நிதியாண்டில் 3,17,384 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 2,21,218 அளவிலான 100ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. அதேபோல புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுகளில் 21,865 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 2017-18ஆம் ஆண்டு இருந்த அளவைவிட 121 சதவிகிதம் அதிகமாகும். அதாவது 2017-18ஆம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டுகளில் 9892 கள்ள நோட்டுகள் இருந்துள்ளன.
அதேபோல 2000 ரூபாய் நோட்டுகளில் 21,847 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. இது 2017-18ஆம் ஆண்டு இருந்த கள்ள நோட்டுகள் அளவைவிட 21.9 சதவிகிதம் அதிகமாகும். அதாவது 2017-18ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகளில் 17,929 கள்ள நோட்டுகள் இருந்துள்ளன. மேலும் புதிதாக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகளில் 12,728 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.
2017-18ஆம் ஆண்டு புழக்கத்திலிருந்த கள்ள நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை 5,22,783 ஆகும். இந்த எண்ணிக்கையை விட 2018-19ஆம் ஆண்டில் மொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏனென்றால் 2017-18ஆம் ஆண்டு இருந்த கள்ள நோட்டுகளில் அதிகபட்சமாக பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. இந்த நோட்டுகள் 2018-19ஆம் ஆண்டில் புழக்கத்தில் இல்லாததால் மொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.