கொரோனா பரவல், ஊரடங்குகளுக்கு மத்தியில் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் நாளை (செப்டம்பர் 13) நடைபெறவுள்ளது. தேர்வு மையங்களுக்கு என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலாம், எதற்கெல்லாம் அனுமதி கிடையாது என்பன குறித்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
எதையெல்லாம் கொண்டுவரவேண்டும்?
நீட் தேர்வு அனுமதி அட்டையுடன் சுயஅறிவிப்புப் படிவம் (ஏ4 தாளில் எடுக்கப்பட்ட அச்சுப்பிரதி)
விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றப்பட்ட அதே புகைப்படம்
செல்லத்தக்க புகைப்பட அடையாள அட்டை
தனிப்பட்ட பயன்பாட்டுக்கான சானிடைசர் (50 மில்லி)
தண்ணீர் பாட்டில் (உள்புறம் தெளிவாக தெரியவேண்டும்)
முகக்கவசம் மற்றும் கையுறை
விண்ணப்பதாரர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ்
எதற்கெல்லாம் அனுமதி கிடையாது
ஹேண்ட்பேக், நகைகள், தொப்பிகள், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கம்யூனிகேசன் தொடர்பான மின்னணு சாதனங்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படாது.
ஆடைக் கட்டுப்பாடுகள்
குறைவான உயரம் கொண்ட காலணிகள் அணியலாம்.
ஷூ போன்ற மூடிய காலணிகளுக்கு அனுமதி கிடையாது.
லேசான அரைக்கை மற்றும் முழுக்கை ஆடைகள் அணியக்கூடாது.
மதம் சார்ந்த அல்லது சமூகப் பழக்கவழக்கம் சார்ந்த குறிப்பிட்ட ஆடைகளை அணியும் மாணவர்கள் சோதனை செய்யப்படுவார்கள். எனவே, கொஞ்சம் முன்பாகவே தேர்வு அறைக்கு வரவேண்டும்.
தேர்வு மையத்திலேயே மாணவர்களுக்குப் புதிதாக முகக்கவசம் வழங்கப்படும். ஏற்கெனவே மாணவர்கள் அணிந்திருந்த முகக்கவசத்தைக் கழற்றிவிட்டு, தேர்வு அறையில் அளிக்கப்படும் முகக்கவசத்தை அணியவேண்டும்.
வீண் குழப்பங்களைத் தவிர்க்க ஒரு நாளைக்கு முன்பே தேர்வுமையத்திற்குச் சென்று பார்த்துவரவேண்டும்.
இவ்வாறு தேசிய தேர்வு முகமை வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது.