ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்துள்ளார்.
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே காஷ்மீரில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டது. அங்கு பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். அத்துடன் அமர்நாத் யாத்திரை பயணிகளுக்கும் கட்டுபாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இன்று காஷ்மீரில் இருக்கும் சூழல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்தார். ஷோப்பியன் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அவர் உரையாடினார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அத்துடன் அப்பகுதியில் பாதுகாப்பு பணியிலுள்ள வீரர்களுடனும் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். அவர்களிடமும் அங்கு நிலவும் சூழல் குறித்து அவர் கேட்டறிந்தார். காஷ்மீரின் ஷோப்பியன் பகுதி வன்முறை சம்பவங்கள் அதிகம் நடைபெறும் என்பதால் அங்கு அஜித் தோவல் ஆய்வு நடத்தியுள்ளார்.