"எனது உருவ பொம்மையை எரியுங்கள், ஏழைகளை குறிவைக்காதீர்"- பிரதமர் மோடி

"எனது உருவ பொம்மையை எரியுங்கள், ஏழைகளை குறிவைக்காதீர்"- பிரதமர் மோடி
"எனது உருவ பொம்மையை எரியுங்கள், ஏழைகளை குறிவைக்காதீர்"- பிரதமர் மோடி
Published on

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி சில அரசியல் கட்சிகள் அனைத்து வகையான வதந்திகளையும் பரப்பி மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் பரப்புரையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் தனிச்சிறப்பு என்று கூ‌றினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி எல்லா வகை வதந்திகளையும் பரப்பி, மக்களின் உணர்ச்சியை சில அரசியல் கட்சிகள் தூண்டுவதாக பிரதமர் குற்றம்சாட்டினார். பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள்கூட போலி வீடியோக்களை பகிர்ந்து மக்களைத் தூண்டி வருவதாக சாடிய மோடி, மக்களின் உரிமைகளைப் பறிக்க, தான் சட்டம் கொண்டு வந்ததாக பொய்யைப் பரப்பும் எதிர்க்கட்சியினரின் சதி வெற்றி பெறாது என்றார்.

தனது பணியில் பாகுபாடு காட்டியதாக எந்த ஆதாரத்தையாவது காட்ட முடியுமா என எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்த பிரதமர், வளர்ச்சித் திட்டங்களின் பயனாளிகள் கோயிலுக்கு செல்பவர்களா, மசூதிக்கு செல்பவர்களா என, தான் ஒருபோதும் பே‌தம் பார்த்ததில்லை என்றும் தெரிவித்தார். நாட்டு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உலக அரங்கில் எதிர்க்கட்சிகள் இந்தியாவை சிறுமைப்படுத்துவதாகவும் மோடி குற்றம்சாட்டினார். தன்னை வெறுப்பவர்கள் தனது உருவ பொம்மையை எரிக்க வேண்டுமே தவிர, ஏழைகளை குறிவைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் மோடி வலியுறுத்தினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றத்தையும் எம்பிக்களையும் மதிக்கும் வகையில் எழுந்து நிற்குமாறு கூட்டத்தினரை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

டெல்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் காலம் காலமாக வசிக்கும் மக்களை இதற்கு முன் மத்தியிலும், இப்போது டெல்லியிலும் ஆட்சியில் இருப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டிய மோடி, 40 லட்சம் மக்களுக்கு புதிய விடியலை ஏற்படுத்தும் வாய்ப்பு தனக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் கிடைத்திருப்பதாகக் கூறினார். ஏழைகளின் வீடுகளை அங்கீகரிக்காத ஆளும் கட்சியினர், தங்களுக்கு நெருக்கமான விஐபிக்களுக்கு 2 ஆயிரம் பங்களாக்களை சட்டவிரோதமாக ஒதுக்கியுள்ளதாகவும் ஆம் ஆத்மி அரசை பிரதமர் விமர்சித்தார். பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வரும் முன்பு, 14 கிலோ மீட்டராக இருந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து, ஆண்டுக்கு 25 கிலோ மீட்டர் என்ற அளவில் விரிவடைந்து வருவதாகக் கூறிய பிரதமர், மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஆம் ஆத்மி அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com