நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. மாணவர்கள் அதிக அளவில் இந்தப் போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்கள். சில இடங்களில் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களின் போது அதில் கலந்து கொண்டவர்களின் கைகளில் இருந்த பதாகைகளில் இரண்டு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. ஒன்று சிஏஏ (தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்) மற்றொன்று என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு).
இந்த இரண்டு வார்த்தைகளும் ஏற்கனவே மக்கள் மத்தியில் புழங்கிக் கொண்டிருக்கும் நிலையில், என்.பி.ஆர் என்ற ஒரு வார்த்தை கூடுதலாக சேர்ந்துள்ளது. அதாவது, தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் என்.பி.ஆர்-ஐ புதுப்பிக்கும் பணிக்காக ரூ 8500 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், Inner Line Permit என்பது குறித்தும் பேசப்படுகிறது. CAA, NRC, NPR, ILP ஆகிய நான்கு அம்சங்கள் குறித்த அடிப்படையான புரிதல் அவசியமாகிறது.
சிஏஏ (தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்)
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் இருந்தும் மத துன்புறுத்தல்களால் இந்தியாவில் தஞ்சமடைந்த இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தம். ஏற்கனவே , 11 ஆண்டுகளில் குடியுரிமை பெறலாம் என்று இருந்ததை 5 ஆண்டுகளாக குறைப்பதை நோக்கமாகக் கொண்டதுதான் இந்த சட்டம்.
என்.பி.ஆர் என்றால் என்ன?
தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது நாட்டில் வழக்கமாக வாழும் ("usual resident") மக்கள் குறித்த பதிவேடு. நாட்டில் வழக்கமாக வாழும் அனைவரும் என்.பி.ஆர்-ல் பதிவு செய்வது கட்டாயம். இதில், இந்திய குடிமக்கள் மட்டுமல்லாது, அந்நிய நாட்டு குடியுரிமை பெற்றவர்களும் இருப்பார்கள். என்.பி.ஆர்-ன் நோக்கம் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் குறித்த தகவல்களை சேகரித்து வைத்தல் ஆகும். 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கப்பட்டது. அந்தத் தகவல்கள் முறையாக 2015ம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டது. இதனையடுத்துதான், அடுத்த என்.ஆர்.சி பட்டியல் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
நாட்டில் வழக்கமாக ("usual resident")வசிப்பவர் என்றால்?
நாட்டின் ஒரு பகுதியில் ஒரு நபர் கடந்த 6 மாதங்களாக வசித்து வருபவர் என்றாலோ, அல்லது அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்தப் பகுதியில் வசிப்பவர் என்றாலோ அவர் வழக்கமாக வசிப்பவர் என்று அர்த்தம். இதற்கு எவ்வித ஆவணங்களையோ அல்லது பயோமெட்ரிக்கையோ வழங்க தேவையில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.பி.ஆர்-க்கும், என்.ஆர்.சிக்கும் என்ன வித்தியாசம்?
குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பான குடியுரிமை விதிமுறைகள் குறித்து 2003ம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் கணக்கெடுக்கும் மக்கள்தொகை பதிவேடு உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது. இதில், இந்திய குடிமக்கள் மட்டுமல்லாமல் அந்நிய நாட்டு மக்களும் இருப்பார்கள்.
ஆனால், என்.ஆர்.சி என்பது இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்திய குடிமக்கள் குறித்த பதிவேடு. என்.ஆர்.சி-யில், தந்தை பெயர், தாய் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், வாழும் முகவரி, திருமணம் மற்றும் குழந்தைகள் குறித்த தகவல், உடல் அங்க அடையாளங்கள், பதிவு செய்யும் தேதி, பதிவு எண், தேசிய அடையாள எண் ஆகிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
Inner Line Permit என்றால் என்ன?
இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. இந்த மாநிலங்களில் சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் என்று சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளுக்குள் செல்ல இந்திய குடிமக்களே Inner Line Permit எனப்படும் உள் அனுமதிச் சீட்டு தேவை. அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது.