என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு முறையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக 50 பிரபலங்களை அணுகுவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறை இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் கடந்த முறையைவிட கூடுதல் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வீடுகளை அணுகும் கணக்கெடுப்பாளர்களுக்கு உரிய விவரங்களை பொதுமக்கள் தரும் வகையில் அவர்களைத் தயார்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு 21 துறைகளுக்கு, மத்திய பதிவாளர் துறை கடிதம் எழுதியுள்ளது. மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக உரிய விளம்பரங்களை செய்யுமாறு சுகாதாரத்துறை, ரயில்வே, மாநில அரசுகளின் விளம்பரத்துறைகளை மத்திய பதிவாளர் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதவிர ராணுவ வீரர்கள், நடிகர்கள், பாடகர்கள், ஆன்மீக தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை அணுகவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஏற்கனவே தூய்மை இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு செல்வதற்கு கிரிக்கெட், சினிமா பிரபலங்களை தூதர்களாக நியமித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.