கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்காக 1000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வாங்கியதில் விதிமீறல் நடைபெற்றிருப்பதாக தலைமைக் கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கூடங்குளத்தில் முதலாவது மற்றும் 2வது அணு உலைகள் செயல்படத் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் 449 கோடியே 92 லட்சம் ரூபாய் கூடுதல் வட்டி செலுத்த நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு உலைகள் செயல்படத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், கடனை திருப்பி செலுத்தும் அட்டவணை மாற்றியமைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் அணு உலைகள் செயல்பட்டு வருவாய் கிடைக்கும் முன்பே கடனை திரும்பச் செலுத்துவது தொடங்கிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 449 கோடியே 92 லட்சம் ரூபாய் கூடுதல் வட்டி செலுத்த நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளது. அணுமின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட குறைபாடுடைய பொருட்களால் 99.47 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறைபாடுடைய பொருட்களால் ஏற்பட்ட கூடுதல் செலவை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சிஏஜி தெரிவித்துள்ளது.
வருங்காலத்தில் அணு உலைகளின் மற்ற அலகுகள் செயல்படத் தொடங்குவதில் காலத் தாமதம் ஏற்பட்டால் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அட்டவணையையும் மாற்றியமைக்க வேண்டும் என சிஏஜி பரிந்துரை செய்துள்ளது.