மாடுகளுக்கு அடையாள எண்.. மத்திய அரசு புதிய திட்டம்
நாடு முழுவதும் உள்ள மாடுகளுக்கு 12 இலக்க அடையாள எண் பொருத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
பசுக்கள் மற்றும் எருமைகள் என மொத்தமுள்ள 8.8 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பிரத்யேக 12 இலக்க அடையாள எண்ணினை பொருத்தும் பணி புத்தாண்டு தினம் முதல் தொடங்கியது. இதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட டேப்லெட் வகை ஸ்மார்ட்போன்களுடன் ஒருலட்சம் பேர் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி போடுவது முதல் அதன் உடல்நிலையைக் கண்காணிக்கும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இருமடங்காக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கால்நடைகளின் காதுப்பகுதியில் பொருத்தப்படும் இந்த அடையாள எண் கொண்ட பாலியூரேதீன் டேக் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் அந்த கால்நடைக்கு பிரத்யேக அடையாள எண் வழங்கப்பட்டு, அதன் உரிமையாளருக்கு கால்நடைகளுக்கான ஹெல்த் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.148 கோடி நிதியினை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.