நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அவையில் 22 மொழிகளில் பேசலாம்.
நாடாளுமன்றத்தில் இதற்கு முன்னதாக 17 மொழிகளில் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டம் எட்டாவது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள 22 மொழிகளில் எந்த மொழிகளிலும் உறுப்பினர்கள் இனி பேசலாம் என தெரிவித்தார். இதனை உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவிப்பதில் மகிழ்ச்சி என்றும் கூறினார்.
அதன்படி டோக்ரி, காஷ்மீரி, கொங்கனி, சாந்தலி, மற்றும் சிந்தி ஆகிய மொழிகளிலும் உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் பேச முடியும். மாநிலங்களவையின் ஒத்துழைப்போடு மக்களவை இந்த வசதியை மேற்கொண்டுள்ளது. ஆனால் உறுப்பினர்கள் எந்த மொழிகளிலும் பேசப்போகிறோம் என்பதை 24 மணி நேரத்திற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.