பல கேள்விகள்..சந்தேகங்கள்.. வழிப்பறியில் தொடங்கி என்கவுன்ட்டரில் முடிந்த விகாஷின் வாழ்க்கை

பல கேள்விகள்..சந்தேகங்கள்.. வழிப்பறியில் தொடங்கி என்கவுன்ட்டரில் முடிந்த விகாஷின் வாழ்க்கை
பல கேள்விகள்..சந்தேகங்கள்.. வழிப்பறியில் தொடங்கி என்கவுன்ட்டரில் முடிந்த விகாஷின் வாழ்க்கை
Published on

2001-ம் ஆண்டு காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே பாஜகவின் முக்கிய பிரமுகரான அப்போதைய அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை சுட்டுக் கொன்றது ஒரு கும்பல். அந்தக் கொலையின் முக்கிய குற்றவாளி விகாஷ் துபே. 1993ம் ஆண்டு வழிப்பறி செய்து தன்னுடைய குற்றக்கணக்கை தொடங்கியுள்ளார் ரவுடி விகாஷ் துபே. அடுத்தடுத்து கொலைகள், கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல் என விகாஷ் துபே மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் 6 கொலை வழக்குகளில் விகாஷ் துபே முக்கிய குற்றவாளி.

இப்படி பல குற்ற நடவடிக்கைகளின் முக்கிய குற்றவாளியான விகாஷ், கான்பூரின் டிக்ரு கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவம் நடந்த நாளன்று அதிகாலை 1.30 மணிக்கு போலீசார் அப்பகுதிக்குச் சென்றனர். ஆனால் போலீசார் வருவதை முன்பே தெரிந்துகொண்ட விகாஷ், போலீசார் வரும் பாதையில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து சாலையை மறைத்து வைத்துள்ளார். வழி மறைக்கப்பட்டதைக் கண்ட காவலர்கள் அனைவரும் தங்களது வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளனர். அப்போது அந்த
இடத்தில் உள்ள கட்டடத்தின் மேல் பகுதியிலிருந்த விகாஷின் ஆட்கள் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் 8 போலீசார் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிர வைத்த இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான விகாஷ் துபேவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். உத்தர பிரதேசத்தில் பல மாவட்டங்களை சல்லடை போட்டு போலீசார் தேடினர்.

தேடப்படும் குற்றவாளியான விகாஷ் துபேவை பிடிப்பது பெரிய சவாலாக இருக்கப் போகிறது என இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் சர்வசாதாரணமாக விகாஷ் சிக்குகிறார். இது பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடைபெற்றது உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், ஆனால், அவர் கைது செய்யப்பட்டதோ மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன். எப்படி அவர் அங்கிருந்து இங்கு வந்து சேர்ந்தார். என்கவுன்ட்டரில் சுட்டுத்தள்ள நூற்றுக்கணக்கான போலீசார் வலைவீசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும், துபே எப்படி மக்கள் நடமாட்டமுள்ள கோயிலுக்கு வந்தார் என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.

மகாகல் கோயிலுக்கு வந்த அவர், தரிசனத்திற்காக விஐபி டிக்கெட்டையும் 250 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். அடையாளம் கண்டுகொண்ட கோயிலின் பாதுகாவலர்கள் அவரிடம் அடையாள அட்டை கேட்டுள்ளனர். அப்படியென்றால் இது கைது அல்ல சரண்டர் தான். வேண்டுமென்றே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு கைதாகி இருக்கிறார் என கருத்துகள் நீள்கின்றன.

இதற்கிடையே விகாஷ் துபேவைச் சுற்றி அரசியல் புயலும் கிளம்பியது.ஒவ்வொரு கட்சியும் விகாஷ் துபேவுக்கும் தங்கள் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்க முந்திக்கொண்டு பேட்டி கொடுத்தன.ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு வெளியான ஒரு வாக்குமூலம் தொடர்பான வீடியோவில், தனக்கு இரண்டு பாஜக எம்.எல்.ஏக்களை தெரியும் என்று துபே தெரிவித்து இருந்தார். அதனால், அவர் பாஜகவுடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டார். ஆனால், துபேவின் தாயார் அளித்த பேட்டி ஒன்றில், ‘விகாஷ் துபே தற்போது பாஜகவில் இல்லை. அவர் சமாஜ்வாடி கட்சியில் இருக்கிறார்’ என்று தெரிவித்திருக்கிறார்.

பதறிப்போன சமாஜ்வாடி கட்சி, துபேவுக்கும் தங்கள் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தது. அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது போன் பதிவுகள் அனைத்தையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ரவுடி துபேயின் கைது சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்றும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இவரது கைது ஒருபுறம் இருக்க, துபேவின் உதவியாளர் இருவர் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அவரது மனைவியும், மகனும் லக்னோவில் கைது செய்யப்பட்டார்கள். இதுபோக, துபேவிடம் 8 மணி நேரம் விசாரணையும் நடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட விகாஷ் இன்று போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து தெரிவித்துள்ள உபி போலீசார், விகாஷ் அழைத்துச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. அப்போது காயமடைந்த போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை எடுத்த விகாஷ் போலீசாரை நோக்கி சுடத்தொடங்கினார். அவரை சரண்டர் ஆகும்படி கூறினோம். ஆனால் அவர் தப்பிக்க முயன்றார். அதனால் அவர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர் இறந்துவிட்டார் எனத்
தெரிவித்துள்ளனர்.

வழிப்பறியில் தொடங்கிய விகாஷின் குற்றச்சம்பவம் அரசியல் கொலைகள், கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என நீண்டது. ரவுடி என்ற வட்டத்துக்குள் மட்டுமல்லாது அரசியல் கட்சிகளுடனும் கிசுகிசுக்கப்பட்ட விகாஷ் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போலீசார் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தி 8 காவலர்கள் உயிரை பறித்து தப்பினார். ஆனால் சில தினங்களில் எளிதாக கோயில் ஒன்றில் சிக்குகிறார். அடுத்த நாளே என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com