விநோதமான திருட்டு வழக்குகள் பற்றி தொடர்ந்து கேள்விப்பட்டு வந்திருப்பீர்கள். அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் உயர் ரக சைக்கிள்களாக பார்த்து திருடி அதனை இரண்டாயிரம், ஆயிரம் ரூபாய் என சொற்ப மதிப்புக்கு விற்று வந்த பலே திருடனை போலீசார் மடக்கிப்பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
கைது செய்யப்பட்ட திருடனிடம் இருந்து கிட்டத்தட்ட 62 சைக்கிள்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்ட போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். கைதானவர் ரவிக்குமார் என்பதும் பஞ்ச்குலாவில் உள்ள மஜ்ரி கிராமத்தில்தான் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருவதாகவும் போலீசார் கூறியிருக்கிறார்கள்.
32 வயது மதிக்கத்தக்க ரவிக்குமார்தான் பஞ்ச்குலாவை சுற்றியிருக்கும் பல்வேறு பகுதிகளில் களவாடப்பட்ட சைக்கிள்களுக்கு பொறுப்பு என்பதும், கடைசியாக கடந்த செப்டம்பர் 14ம் தேதி செக்டார் 26 பகுதியில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை திருடியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2,4,7,9,10,11,12,12A,20,21,25 மற்றும் 26 ஆகிய பிரிவுகளில் திருடப்பட்ட சைக்கிள்கள் தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து நான்கு நாட்களுக்குப் பிறகு ரவிக்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பயன்படுத்தி ரவிக்குமார் திருடிய மொத்தம் 62 சைக்கிள்கள் மீட்கப்பட்டிருக்கிறது. அதில் சில சைக்கிள்கள் 20 ஆயிரம் ரூபாய் வரை இருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.
லூதியானாவில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு சண்டிகரின் ராய்புர் குர்த் பகுதிக்கு இடம் மாறிய ரவிக்குமார், ஸிராக்புர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆனால், போதைக்கு அடிமையானதன் காரணமாக அந்த வேலை ரவிக்குமாருக்கு பறி போனதால் பஞ்ச்குலாவிற்கு இடம் பெயர்ந்து சைக்கிள்களை திருடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் என செக்டார் 26 க்ரைம் பிரிவு போலீசார் மொஹிந்தர் சிங் கூறியுள்ளார்.