பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பு - ரகுராம் ராஜன்

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பு - ரகுராம் ராஜன்
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பு - ரகுராம் ராஜன்
Published on

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2016, நவம்பர் 8 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு முக்கிய நடவடிக்கைகளால் நாட்டிற்கு பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக ஆளும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், வேலைவாய்ப்பின்மை உருவாகியுள்ளது, பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. 

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியாவின் எதிர்காலம் குறித்து பேசிய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், “பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்ற இரண்டு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் இந்திய பொருளாதாரத்தின் மீது தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது” என்று கூறினார்.

மேலும், “பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்ற இரண்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் முன்பு 2012 முதல் 2016 வரையிலான 4 ஆண்டுகளில் இந்தியா வேகமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வந்தது. 2017 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதாரம் உச்சக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த தருணத்தில், இந்தியாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. 

தற்போதையை தொழிலாளர் சந்தைக்கு 7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி போதுமானது இல்லை. இன்னும் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது. மாதம் ஒன்றிற்கு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 

         
தற்போதையை நிலையிலேயே திருப்தி அடைய முடியாது. 7 சதவீதம் பொருளாதார வளர்ச்சிக்கு கீழே சென்றால், கண்டிப்பாக நாம் ஏதோ தவறு செய்து கொண்டிருக்கிறோம். அடுத்த 10-15 வருடங்களில் இந்தியா புதிய பொருளாதார வளர்ச்சியை பெற வேண்டியுள்ளது” என்றார் ரகுராம் ராஜன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com