“ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பரிந்துரைக்க மாட்டோம்” - மருத்துவ  கவுன்சில் 

 “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பரிந்துரைக்க மாட்டோம்” - மருத்துவ  கவுன்சில் 
 “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பரிந்துரைக்க மாட்டோம்” - மருத்துவ  கவுன்சில் 
Published on
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா நோயாளிக்களுக்கு தரலாம் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இந்திய மருத்துவ மறுசீரமைப்பு கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. 
மலேரியா நோய்க்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து கொரோனா சிகிச்சைக்கு நல்ல பலன் அளிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார். அதனை அடுத்து அந்த மருந்து குறித்த ஆய்வை அனைத்து நாடுகளும் முன்னெடுக்கத் தொடங்கின. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னால்  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை என்றால் இந்தியா விளைவுகளைச் சந்திக்கும் என்ற தொனியில் ட்ரம்ப் பேசி இருந்தது சர்ச்சையானது. இதனிடையே ட்ரம்ப்பின் வேண்டுகோளை ஏற்று மனிதாபிமான அடிப்படையில்  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க முன்வந்துள்ளதாக இந்திய வெளிவுறத்துறை விளக்கம் அளித்திருந்தது. 
அதனை ஏற்று அதிபர் ட்ரம்ப், அது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில்,  அசாதாரண நேரங்களில் தான் நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை மறக்க மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சோதனைகளின் போது திருப்திகரமான முடிவுகள் காணப்படாவிட்டால், கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பரிந்துரைக்க மாட்டோம் என்று இந்திய மருத்துவ மறுசீரமைப்பு கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூறியுள்ளது. மேலும் இது குறித்து செய்தி ஒன்றிற்கு ஐசிஎம்ஆர் விஞ்ஞானி கங்கா கேத்கர் பதிலளிக்கும் போது  “இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து கட்டாயமில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தொற்றுநோயைக் குறைக்குமா என்பது சோதனைகளுக்குப் பிறகுதான் தெரியும். கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அதை இன்னும் பரிசோதித்து வருகின்றனர். ஆகவே இதை நாங்கள் யாருக்கும் பரிந்துரைக்க மாட்டோம்”என்று  தெரிவித்துள்ளார். 
இதனிடையே  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பற்றாக்குறை நாட்டில் இல்லை என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com