70 ஆண்டுகளாக நாடு சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், 60,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 81 முதலீட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, ஐடிசி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் பூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தொழிலதிபர்களை எதிர்க்கட்சிகள் திருடர்கள் என குறிப்பிடுவதாக கண்டனம் தெரிவித்தார். தனது குறிக்கோள் தெளிவாக இருப்பதால், தொழிலதிபர்களுடன் நிற்பதற்கு தாம் தயங்கவில்லை எனக் கூறினார். யாருடனாவது நிற்பதாலேயே ஒருவர் மீது கறைபடிந்துவிடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
காந்தி தனது குறிக்கோள் குறித்து மிகத் தெளிவாக இருந்ததால் பிர்லா குடும்பத்தாருடன் தங்குவதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை என மோடி கூறினார். தமக்கு எதிராக குறைகூறுவோர் எழுப்பும் பிரச்னைகள் எல்லாம் 70 ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும் கடந்த 4 ஆண்டுகளில் உருவானவை அல்ல என்றும் குறிப்பிட்டார்.