குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளாவில் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்ட நார்வே நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
விசா விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் நார்வே நாட்டைச் சேர்ந்த ஜென்னி மெட்டே ஜொஹன்சன் என்ற பெண் சுற்றுலாப் பயணியை இந்தியாவிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் உறுதி செய்துள்ளது. ஜென்னி மெட்டே ஜொஹன்சன் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதனையடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில் படித்து வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாணவர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். அதனால் அவர் உடனடியாக ஜெர்மன் நாட்டிற்கு திருப்பி அனுப்பட்டது குறிப்பிடத்தக்கது.