ஓடும் ரயிலில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சேர்ந்தவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் யோகி மற்றும் அவருடைய சகோதரர் லோகேஷ் குமார் யோகி இருவரும் பயணம் செய்தனர்.
அதே ரயில் பெட்டியில் பயணித்த மற்றொரு பயணி இவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டு வந்துள்ளார். ரயில் நெல்லூர் அருகே சென்றபோது அந்த நபர் இருவருக்கும் குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். குளிர்பானத்தை குடித்த இருவரும் சற்று நேரத்தில் திடீரென மயக்கம் அடைந்தனர்.
பின்னர் இருவரும் நாக்பூர் அருகே மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்தபோது, தாங்கள் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன்கள் திருட்டு போய் இருப்பதை கண்டு் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாக்பூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். உடனடியாக நாக்பூர் ரயில்வே போலீசார் சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் ரோகித் குமார் தலைமையிலான ரயில்வே பாதுகாப்புபடை போலீசார் ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரை தேடிவந்தனர்.
இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட நபர் சென்ட்ரலிலிருந்து டெல்லி செல்லக் கூடிய ரயிலில் மீண்டும் பயணிக்க ரயிலில் ஏறும்போது, ரயில்வே போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பதும் தெரிந்தது.
ரயிலில் பயணித்து பயணிகளிடம் பேசி பழகுவதுபோல் நடித்து மயக்க மருந்து கொடுத்து திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டது ரயில்வே போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 7 செல்போன்கள் 250 மயக்க மாத்திரைகள் மற்றும் ரூ. 4000 பறிமுதல் செய்தனர். ரயிலில் மற்றும் ரயில் நிலையங்களில் இதுபோன்ற முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களையோ, குளிர்பானங்களை பொதுமக்கள் வாங்கி அருந்தக் கூடாது என ரயில்வே போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.