உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இரு சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டா அருகில் உள்ள கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சகோதரிகளான லக்ஷ்மி (18), நிஷா (13) இருவரும் அவர்கள் கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நொய்டா காவல்துறையினர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சகோதரிகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவர்களது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த சகோதரிகளின் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சகோதரிகளை அவரின் உறவினர் ஒருவர் அடையாளம் கண்டு காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். மேலும் இதில் உயிரிழந்த லக்ஷ்மி என்ற பெண்ணை அவரது உறவினர் ஒருவர் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாக கூறுகின்றனர். அந்த நபர் மீது இரு சகோதரிகளின் பெற்றோர்கள் சந்தேகப்படுவதாக தெரிகிறது. இதுகொலையா அல்லது தற்கொலையா என பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தான் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன? அவர்களை தற்கொலைக்கு தூண்டியது யார் உள்ளிட்ட கேள்விகள் முன்வருகின்றன. கொலை என்றால் இந்த கொலையை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? பட்டப்பகலில் இந்த கொலையை செய்தது எப்படி? சகோதரிகளை மரத்தில் தொங்கவிட்டது யார்? எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.