வேறு வழியே இல்லாமல் மகா கூட்டணியை விட்டு வெளியே வந்ததாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறினார்.
பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக நிதிஷ் குமார் பாட்னாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய நிதிஷ், மகா கூட்டணியைக் காப்பாற்ற தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்ததாகக் குறிப்பிட்டார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து வெளிவந்திருந்தால் இன்றைய அரசியல் சூழலே வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் நிதிஷ் குறிப்பிட்டார். ஊழல் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று குறிப்பிட்ட அவர், வேறு வழியில்லாமலேயே கூட்டணியை முறித்ததாகவும் கூறினார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் அறிவித்தபடியே எதிர்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரிக்கப் போவதாகக் கூறிய அவர், இதில் பாஜகவுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.