மின்சார கார் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கும் வரை டெஸ்லா நிறுவனத்திற்கு வரிச்சலுகை கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உலக அளவில் மின்சார கார் உற்பத்தியில் முன்னோடி நிறுவனமாக டெஸ்லா திகழ்கிறது. இதன் நிறுவனரும் அமெரிக்க பணக்காரருமான எலன் மஸ்க், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்களது கார்களுக்கு வரிச்சலுகை வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறார். அவரது கோரிக்கையை மத்திய மறைமுக வரிகள் விதிப்பு வாரியம் அண்மையில் நிராகரித்திருந்தது.
இந்நிலையில், மக்களவையில் பதில் அளித்த கனரக தொழில்துறை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர், சீனர்களுக்கு வேலையை வழங்கி, இந்திய சந்தையை பெற விரும்பும் டெஸ்லா நிறுவனத்தின் செயல் நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் நடைபெறாது என்று கூறினார். இந்திய சந்தையை பயன்படுத்த வேண்டுமானால் வேலைவாய்ப்புகள் இந்தியர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே அரசின் கொள்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார். சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.