மேகதாது அணை திட்டத்துக்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூர், கிருஷ்ணா அரசு இல்லத்தில் மாநிலத்தின் நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, “கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அனுமதி அளிக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். நீர்மேலாண்மையில் கவனம் செலுத்தி, அதிக நீரை பாசனத்துக்குக் கொண்டுவர அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.
தொடர்ந்து மேகதாது அணை திட்டத்துக்கு தமிழக அரசின் அனுமதி தேவை என்று, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “ஆந்திர மாநிலம் தொடுத்த வழக்கு ஒன்றில் குடிநீர்த் திட்டங்களுக்கு கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உள்ளது. மேகதாது அணை திட்டமும் குடிநீர்த் திட்டமாக இருப்பதால், அதை செயல்படுத்த தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.
இதுகுறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றேன். அப்போது, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு என்னிடம் தெரிவித்தார். அதன்படி, டெல்லி சென்று அவரிடம் ஆவணங்களை வழங்கி விளக்கம் அளிப்பேன். மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அந்த வழக்கையும் கர்நாடகம் எதிர்கொள்ளும்” என்றார்.