கர்ணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி விடுதலை நாள் கருத்தரங்கம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பின்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது...
டெல்லி முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு டெபாசிட் வாங்காத கிரண்பேடியை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக மத்திய பாஜக அரசு நியமித்து இருக்கிறது. இவர், ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்க தடையாக உள்ளார். எனவே ஆளுநரை வேறு மாநிலத்திற்கு அல்லது டெல்லிக்கு மோடி அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கர்ணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது. பாஜக எந்த அணி அமைத்தாலும் சரி, பாஜக ஆட்சியை விலை கொடுத்து வாங்கலாம் என்றாலும் அது பலிக்காது என்றார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் போகும் இடம் எல்லாம் வரவேற்பு இருக்காது. அந்த அவமானத்தை அவர்களே சந்திக்கட்டும் என்றும் விமர்சனம் செய்தார்.