மகர சங்கராந்தி திருவிழா அன்று தனக்கு பிடித்த உணவான ‘தஹி சுரா’வை உண்ண வேண்டும் என லாலு பிரசாத் அனுமதி கோரியுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத்துக்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. தண்டனை காரணமாக லாலு பிரசாத் சிறை செல்வது, இது 8வது முறையாகும்.
இந்நிலையில் எந்த முறை அவர் சிறை சென்ற போதிலும் இல்லாத கட்டுப்பாடுகள் இந்த முறை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று பேர் லாலுவை சந்திக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தன்னை காண கூடுதலாக பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற லாலுவின் கோரிக்கையும் மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வரும் ஞாயிற்றுக்கிழமை மகர சங்கராந்தி திருவிழா வருவதால் அதனை பிரம்மாண்டமாக கொண்டாடவும், தனக்கு பிடித்த ‘தஹி சுரா’ என்ற உணவு வகையை உண்ணவும் அனுமதி வழங்க வேண்டும் என லாலு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு, பிரம்மாண்டமாக பண்டிகையை கொண்டாட அனுமதி வழக்கப்படாது என்றும் ஆனால் கண்டிப்பாக சிறைக்குள் கொண்டாட அனுமதி வழங்கப்படும் என்று நீதிபதி உறுதியளித்தார். மேலும் ‘தஹி சுரா’ உணவும் சிறைக்குள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.