நாளை இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் இருக்கும் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு படுக்கை விரிப்பு, கம்பளி போர்வைகள் வழங்கப்படாது என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 25 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மே 12 முதல் பயணிகள் ரயில் சேவையை படிப்படியாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 15 ஜோடி ரயில்கள் இயக்கப்படும். பயணச் சீட்டு உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில்களில் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ரயில் நிலையிலும் உடல் பரிசோதனை செய்யப்படும். கொரோனா பாதிப்பு இல்லாதவர்களும் ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தச் சிறப்பு ரயில்கள் புது டெல்லியிலிருந்து திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புபனேஷ்வர், செகுந்தராபாத், பெங்களூர், சென்னை, திருவனந்தபுரம், மடகான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ரயில் நிலையங்களிடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளம் மூலமகாவே நடைபெறும். ரயில் நிலையக் கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை கிடையாது. மேலும் நடைமேடை டிக்கெட் விற்பனையும் கிடையாது எண ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவிதம் கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படும். மேலும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி போர்வை வழங்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது.