'இந்த ஆண்டில் இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை' காஷ்மீர் தொழிலாளியின் கண்ணீர் கதை!

'இந்த ஆண்டில் இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை' காஷ்மீர் தொழிலாளியின் கண்ணீர் கதை!
'இந்த ஆண்டில் இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை' காஷ்மீர் தொழிலாளியின் கண்ணீர் கதை!
Published on

கடந்த ஓர் ஆண்டாகவே காஷ்மீர் மக்களின் வாழ்க்கையில் பிரச்னைகள்தான். பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் மெல்ல முன்னேறிவந்த அவர்களை, கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குகள் படுபாதாளத்திற்குத் தள்ளிவிட்டன. இங்கு சுற்றுலாத் துறையின் வருமானமும் பத்து ஆண்டுகளைவிட மிகவும் குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோலிபோரா பகுதியில் பஸ் கண்டக்ராக வேலை பார்த்துவந்த நசீர் அஹம்மது, ஊரடங்கு நாட்களில் வேலைவாய்ப்பை இழந்து வீட்டில் முடங்கியுள்ளார். அவரைப் போல கடை நடத்திவந்த ஒருவரும் கடையை பாதி திறந்துவைத்துக்கொண்டு சோர்வுடன் அமர்ந்திருக்கிறார். இப்படித்தான் சாமான்ய மக்கள் பலரும் காஷ்மீர் மண்ணில் அன்றாட வாழ்க்கையை நகர்த்திவருகின்றனர்.

2019 ஆம் ஆண்டில் மிகவும் குறைவான அளவிலேயே சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்தது. ஸ்ரீ நகரில் உள்ள நைஜீன் நதியில் உள்ள படகு இல்லம் வெறிச்சோடிக் கிடக்கிறது. காஷ்மீர் தொழில்துறையில் 2019, ஆகஸ்ட் 5 முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காஷ்மீரின் பல பகுதிகளில் காணப்படும் சந்தைகளில் மனிதர்கள் நடமாட்டமின்றி புறாக்கள் பறந்து விளையாடுகின்றன. மூன்று படகு வீடுகளை வைத்திருக்கும் குலாம் காதிருக்கு ஒரு பைசாகூட வருமானம் இல்லை. "இந்த ஆண்டில் இதுவரையில் ஒரு ரூபாய்கூட நான் சம்பாதிக்கவில்லை. வாழ்வதற்கு வேறு வழியும் தெரியவில்லை " என்று கையை விரிக்கிறார். வாடகை டாக்சி ஓட்டுநர்கள் நிலைமையும் அதேதான்.

இந்த ஆண்டின் இறுதியில் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையில் மக்களும் வணிகர்களும் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com